அரசியல்

பதவியை ராஜினாமா செய்ய முடியாது... வைகோ உத்தரவுக்கு மதிமுக எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் மறுப்பு!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அந்த உத்தரவை ஏற்க முடியாது என கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதவியை ராஜினாமா செய்ய முடியாது... வைகோ உத்தரவுக்கு மதிமுக எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் மறுப்பு!
சட்டசபை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவைச் சேர்ந்த சீர்காழி செந்தில் செல்வன் மற்றும் கடையநல்லூர் தொகுதி திமு ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், அரசியல் சூழல் மாறியதால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது. இதனைத் தொடர்ந்து, உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற இரு எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வைகோ உத்தரவிட்டார்.

ஆனால், அந்த முடிவை ஏற்க மறுத்த இரு எம்.எல்.ஏ.க்களும், மதிமுக பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து கடையநல்லூர் எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர் வைகோ மீது எனக்கு 42 ஆண்டுகளாக அன்பும், விசுவாசமும் உள்ளது. ஆனால், என்னை வெற்றிபெறச் செய்த கடையநல்லூர் தொகுதி மக்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தலைவர் வைகோ அவர்களோ, சட்டமன்ற உறுப்பினரான என் மீதோ எந்தவித களங்கமும் ஏற்படக் கூடாது என்பதால் பதவி விலகல் முடிவை இப்போது மேற்கொள்ள வேண்டாம். குறைந்தபட்சம் ஆறு மாத காலம் பொறுத்திருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றத்தில் மதிமுக கொள்கை உணர்வுடன் செயல்பட்டு வருவதாகவும், தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்கும் சூழல் ஏற்பட்டால் மக்களிடம் சென்று முறையிட தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக கட்சியும், தலைவர் வைகோ அவர்களும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன். ஆனால், மக்கள் நம்பிக்கையை காப்பதே எனது முக்கிய கடமை” என்றும் திமு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதிமுக எம்எல்ஏ -களின் இந்த நிலைப்பாடு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.