அரசியல்

மாஜி அமைச்சர்களுக்கு முக்கிய பதவி.. முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

மாஜி அமைச்சர்களுக்கு முக்கிய பதவி.. முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!
CM Vijay
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி வந்த மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கி, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் விஜய் தலைமையிலான தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அவ்வாறு இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உட்பட மொத்தம் 15 பேரை தவெகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கடம்பூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன், உடுமலை இராதாகிருஷ்ணன், கடலூர் சம்பத், ஈரோடு ராமலிங்கம், உளுந்தூர்பேட்டை ஆனந்தன், பச்சைமால், முசிறி சிவபதி, வைகைச்செல்வன், வளர்மதி மற்றும் திருப்பூர் ஆனந்தன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை சந்தீப் ஆனந்த், திருப்பூர் முத்து வெங்கடேஸ்வரன், விழுப்புரம் தொள்ளமூர் கண்ணன், திருவள்ளூர் குமரன் ஆகியோரும் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் கட்டமைப்பை விரிவாக்கும் வகையில், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கி 'திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம்' புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினரான மகேந்திரனை, இந்தப் புதிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தவெக செயலாளராக நியமித்துத் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.