அரசியல்

ஜெம் வீரமணி வழக்கு: முதலமைச்சர், அமைச்சர்களை விசாரிக்க வேண்டும்.. திமுக மனு!

ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு: முதலமைச்சர், அமைச்சர்களை விசாரிக்க வேண்டும்.. திமுக மனு!
DMK
ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், திமுக மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகிய மூவருக்கும் “சம்மன்” அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் (SIT) திமுக பொருளாளரும் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அளித்துள்ள புகார் மனுவின் விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி முதலமைச்சர் விஜய், ஜெம் வீரமணியைத் திமுக பாதுகாத்ததாகப் பொதுவெளியில் குற்றம்சாட்டினார். அதே நாளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஜெம் வீரமணியைத் திமுக பாதுகாத்ததோடு, அவர் மீதான வழக்கையும் தவறாக முடித்து வைத்ததாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஜெம் வீரமணியைப் பாதுகாப்பதற்காகத் திமுக அவரிடமிருந்து ரூ.500 கோடி பெற்றதாகக் குற்றம்சாட்டினார்.

அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் மூன்று விதமாகப் பார்க்கப்பட வாய்ப்புள்ளதாக டி.ஆர்.பாலு சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக மற்றும் அதன் தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளாக இருக்கலாம். இந்த மூவரிடமும் வழக்கு தொடர்பான மிகமுக்கியத் தகவல்கள் இருந்தும், போக்சோ சட்டப்படி அவற்றை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்காமல் மறைத்திருக்கலாம்.

புலனாய்வு அதிகாரியின் "கேஸ் டைரி" (Case Diary) விவரங்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் இவர்களுக்குக் கிடைத்து, அவை பொதுவெளியில் பரப்பப்பட்டிருக்கலாம்.

முதலமைச்சரும் இரு அமைச்சர்களும் கூறியுள்ள கருத்துகள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையுடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பதால், அவர்களிடம் உள்ள ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்களை உடனடியாகப் பெற வேண்டியது அவசியமாகும்.

அவர்களிடம் உண்மையிலேயே ஆதாரங்கள் உள்ளவா? இருந்தால் அவற்றை இதுவரை அதிகாரிகளிடம் தராதது ஏன்? விசாரணை ரகசியங்கள் இவர்களுக்குக் கிடைத்ததா? போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள வழக்கில் ஆதாரங்கள் அழிக்கப்படாமல் சேகரிக்கப்பட்டால் மட்டுமே விசாரணை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் திட்டமிட்டுப் பொய்யாக முன்வைக்கப்பட்டிருந்தாலோ, சட்டப்படி தெரிவிக்க வேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ அல்லது விசாரணை ரகசியங்கள் வெளியிடப்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) உரிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றத்தில் தொடர்புடையவர்கள் தப்பிக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ள அதேவேளையில், ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புபவர்கள் எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் அவர்களையும் சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தி சம்மன் அனுப்ப வேண்டும் என்று டி.ஆர்.பாலு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.