அரசியல்

நடிகை குறித்த சர்ச்சை கருத்து: உதயநிதி மீது நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

நடிகை குறித்த சர்ச்சை கருத்து: உதயநிதி மீது நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!
Udhayanidhi Stalin
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை ஒருவர் குறித்துத் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தஞ்சாவூர் காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை உடனடியாகக் கைது செய்து, பின்னர் விடுவித்தது.

உதயநிதி மீது புகார்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிச் கழகத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் செல்வகுமார் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், குறிப்பிட்ட நடிகை குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சுக்குத் தக்க விளக்கமளிப்பதோடு, நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் அவர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மாநில மகளிர் ஆணையத்திற்குப் பரிந்துரை

செல்வகுமார் அளித்த புகாரை பரிசீலித்த தேசிய மகளிர் ஆணையம், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளது.