அரசியல்

தொகுதி மறுவரையறை: முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

தொகுதி மறுவரையறை: முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு!
All Party Meeting
மத்திய அரசால் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னையில் கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தைப் பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயல்வதாகத் தகவல்கள் வெளியாகின.

இதன் காரணமாகத் தமிழகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிக்க மாநிலத்தின் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மதியம் 3 மணிக்குத் தொடங்கவுள்ள இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அதிமுக, திமுக, பாமக, தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.

காவேரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட நிபந்தனை விதித்துள்ளதால் திமுக எம்.பி.க்களும் இக்கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். தொகுதி மறுவரையறை குறித்து திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தவெக அரசு நடத்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.மேலும், அதிமுக சார்பில் எம்.பி.க்கள் தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்டோர் டெல்லியில் இருப்பதால் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மக்கள் நீதி மய்யத்தின் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், தேமுதிகவின் சுதீஷ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இக்கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.