BOX OFFICE-ஐ கலக்கும் 'மண்டாடி'.. ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்து சூரி சாதனை!

BOX OFFICE-ஐ கலக்கும் 'மண்டாடி'.. ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்து சூரி சாதனை!

நடிகர் சூரியின் 'மண்டாடி' திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

Author: Christon சினிமா
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், உலகளவில் ரூ. 103.72 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடிகர் சூரியின் திரைவாழ்க்கையில் முதன்முறையாக ரூ.100 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை 'மண்டாடி' பெற்றுள்ளது.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரட் குமார் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கிடையே நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை, கேமரா இயக்கம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை ரசிகர்களுக்குச் சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுத்து வருகின்றன.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, சுஹாஸ், சத்யராஜ், பாலசரவணன், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இத்திரைப்படத்திற்குத் தொடக்கம் முதலே நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 500-க்கும் அதிகமான திரைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

திரையிடப்பட்டு 12 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்திய அளவில் நிகர வசூலாக ரூ. 75.55 கோடியையும், மொத்த இந்திய வசூலாக ரூ. 88.32 கோடியையும் ஈட்டியுள்ளது. வெளிநாட்டுச் சந்தைகளில் ரூ. 15.40 கோடி வசூலித்துள்ளதை அடுத்து, உலகளாவிய மொத்த வசூல் ரூ. 103.72 கோடியை எட்டியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ என வெற்றிகரமான படங்களைக் கொடுத்து வந்தார். தற்போது 'மண்டாடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி வசூல் தந்த நடிகர்களின் பட்டியலில் இணைந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களான ஜனநாயகன், கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் டிசி ஆகிய படங்களின் வரிசையில் டாப் 5 பட்டியலில் 'மண்டாடி' இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.