இளையராஜாவின் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் முன்பாக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். ரசிகர்களின் இந்த அன்பிற்கு நன்றி தெரிவித்துப் பேசிய இளையராஜா, "ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் என்னைச் சந்தித்து வாழ்த்தும் ரசிகர்களின் அன்புக்கு மனமார்ந்த நன்றிகள்; ரசிகர்கள் என்னை வாழ்த்துகிறார்கள், நான் அவர்களை வாழ்த்துகிறேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், அவரது இளைய மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, இளையராஜாவை நேரில் சந்தித்துத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தலைவர்களின் வாழ்த்துப் பதிவுகள்
திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர் அவர். 'இசைஞானி' என்று கலைஞர் பட்டம் சூட்டிய அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் என்றும் தொடரட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், "உங்களது இசை உங்களது வயதைப் போலப் பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்களது பேராசைகளையெல்லாம் கடந்த நீண்ட ஆயுளைப் பெற்று இசையோடு வாழ வேண்டும்" எனத் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
LIVE 24 X 7









