சினிமா

"தனுஷுக்கு சினிமா பிடிக்காது.. அழுதுகொண்டேதான் நடிப்பான்"- கஸ்தூரி ராஜா ஓபன் டாக்!

நடிகர் தனுஷின் ஆரம்ப கால திரைப்பயணம் குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜ பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Kasthuri Raja About Dhanush
பவிஷ் நடித்துள்ள 'லவ்வோ லவ்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தனுஷின் அப்பாவும், பவிஷின் தாத்தாவுமான இயக்குநர் கஸ்தூரி ராஜா, தனது மகன்களின் திரைப்பயண ஆரம்பகால போராட்டங்கள் குறித்துப் பல சுவாரசியமான உண்மைகளைப் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், தனது இளைய மகன் தனுஷுக்கு ஆரம்பத்தில் சினிமாவே பிடிக்காது என்றும், ஷூட்டிங் வரமாட்டேன் என்று அடம் பிடிப்பார் என்றும் குறிப்பிட்டார். "ஆரம்பத்தில் தனுஷுக்கு நடிப்பதில் துளியும் விருப்பமில்லை. முதல் ஐந்து படங்கள் வரை அவர் அழுதுகொண்டே தான் நடித்தார்; படப்பிடிப்புக்கு வரக்கூட அழுதுகொண்டே தான் வருவார். அதன் பின்னர்தான் சினிமாவை மெல்லப் புரிந்து கொண்டு, இன்று சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கி வருகிறார்" என்று அவர் தெரிவித்தார்.

தனது மூத்த மகன் செல்வராகவன் குறித்தும் பேசிய அவர், "என் குழந்தைகள் சினிமாவுக்கு வரக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். செல்வராகவன் நன்றாகப் படித்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, திடீரெனப் படிப்பு வேண்டாம் சினிமா தான் வேண்டும் என்றார். நான் அவரைப் பட்டம் வாங்கிவிட்டு வருமாறு கூறினேன்.

அதன்பின் அவரை அமெரிக்கா அனுப்ப முயன்றேன், ஆனால் அவர் 'காதல் கொண்டேன்' படத்தை இயக்கி இன்று இவ்வளவு பெரிய இயக்குநராக மாறுவார் என நான் நினைக்கவில்லை" என்றார். ஒரே மேடையில் அப்பா, மகன், பேரன் என மூன்று தலைமுறையினர் இருப்பது தமக்கு மிகுந்த பெருமையளிப்பதாகக் கஸ்தூரி ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.