சினிமா

“நான் சொன்னது வேற...” ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டார்களா? அஜித்தின் வைரல் ஆடியோ!

அஜித்தின் ரேஸ் பயணம் குறித்து ரசிகர்கள் கவலையும் கோபமும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வெளியாகியுள்ள அஜித்தின் ஆடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

“நான் சொன்னது வேற...” ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டார்களா? அஜித்தின் வைரல் ஆடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பதுடன், மோட்டார்ஸ்போர்ட்ஸ் மீதும் தீவிர ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித்குமார். தனக்கென ஒரு அணியை உருவாக்கி சர்வதேச அளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் அஜித் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில், போர்ச்சுகலில் உள்ள போர்டிமாவ் சர்க்யூட்டில் அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ பந்தயத்தின் இறுதிச் சுற்றில் பங்கேற்கிறார் அஜித். இதற்காக ரசிகர்களின் ஆதரவைக் கேட்டு அஜித் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

“உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். லவ் யூ ஆல்” என அவர் கூறியிருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால், அதே நேரத்தில் சில ரசிகர்களிடம் இருந்து வித்தியாசமான ரியாக்‌ஷன்களும் வந்துள்ளன.

ஏற்கெனவே ரசிகர்களிடம் “உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று தொடர்ந்து அறிவுரை கூறி வந்த அஜித்திடம், தற்போது ரசிகர்களே, “எங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும் அண்ணா” எனக் கூறத் தொடங்கினர்.

அஜித் சொன்ன வார்த்தையையே அவரிடமே திருப்பிப் போட்ட ரசிகரின் கமெண்ட் தற்போது கவனம் பெற்றது. இதனைப் பார்த்த நெட்டிசன்களும், “அண்ணனுக்கே செக் வைத்துவிட்டார்களே!”, “அஜித் சொன்னதை அஜித்திடமே திருப்பி சொல்லிட்டாங்க!” என கலகலப்பாக கமெண்ட் செய்தனர்.

ஒருபக்கம் ரேஸ் களத்தில் அஜித்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்க... மறுபக்கம், “அண்ணா... எங்களுக்கு வேலை இருக்கு, குடும்பம் இருக்கு.. அதை பார்க்க வேண்டும்... உங்கள் ரேஸை காண பணம் செலவழிக்க முடியாது” என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில்தான் தற்போது அஜித்தின் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், “Follow motorsport. Don’t just support me, support the other racers too” என்று அஜித் கூறுவதாக பகிரப்பட்டு வருகிறது. ”நான் ரேஸ் செய்யும் team-ஐ மட்டும் பின்தொடரச் சொல்லவில்லை. மோட்டார் ஸ்போர்ட்ஸைப் பின்தொடருங்கள், மற்ற இந்திய ரேஸ் டிரைவர்களையும் ஆதரியுங்கள். நான் சாலையில் ரேஸ் செய்ய சொல்லவில்லை. தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்” என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.





அதாவது, மோட்டார்ஸ்போர்ட்ஸ் என்பது ஒரு தனிநபரை மட்டும் சார்ந்தது அல்ல. அது ஒரு விளையாட்டு என்றும், தன்னை மட்டும் ஆதரிப்பதற்குப் பதிலாக மற்ற ரேஸர்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பதாக தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், பொது சாலைகளில் ரேஸ் செய்வது, ஆபத்தான ஸ்டண்ட்களில் ஈடுபடுவது போன்றவற்றை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அஜித் அறிவுறுத்தியதாக அந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், “ரேஸ் என்றால் அஜித் மட்டும் அல்ல... அது ஒரு ஸ்போர்ட். பாதுகாப்பாக இருங்கள்” என்ற மெசேஜை ரசிகர்களுக்கு அஜித் கொடுத்திருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆதரவு கேட்ட தன்னை தவறாக ரசிகர்கள் புரிந்துக் கொண்டுள்ளனர் என்று அஜித் உண்மையிலேயே கூறினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.