"ஆதிவாசி.. அடக்கி வாசி.." எடப்பாடியை விமர்சித்த தவெக.. பதிலடி கொடுத்த அதிமுக IT WING!

முதலமைச்சர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசியதை தவெக ஐடி விங் கடுமையாக விமர்சித்த நிலையில், அதிமுக ஐடி விங் சார்பில் காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.


ADMK vs TVK
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இது தொடர்பாக தவெக மற்றும் அதிமுக ஐடி விங் அமைப்புகளுக்கு இடையே சமூக வலைதளங்களில் கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

இபிஎஸ் விமர்சனம்

தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "விஜய் ரீல் விட்டுக்கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். பாசம் என்பது தாய், தந்தை, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வாழ்வதில்தான் இருக்கிறது. படங்களில் வீர வசனம் பேசுவது போல நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்ட வேண்டும்" என்று விமர்சித்திருந்தார். மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதல்வர் விடுமுறை எடுத்துக்கொள்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தவெக ஐடி விங் பதிவு

எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தவெக ஐடி விங், "எடப்பாடி பழனிசாமி நாகரிக எல்லையைத் தாண்டிப் பேசுகிறார். கடந்த தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பிறகு திமுகவுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை அறிவாலயத்தில் அடகு வைத்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று காட்டமாகக் குறிப்பிட்டிருந்தது.

அதிமுக ஐடி விங் பதிலடி

தவெகவின் இந்த விமர்சனத்திற்கு அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. அதில், "ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?

"ல்தகா சைஆ" போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!! குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா? அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?

பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல! கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜய்யின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?

இன்று வாய்கிழிய "தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்" என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்... மன்னிக்க... ஆச்சரியக்குறிக்கு, கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?

தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், எடப்பாடி பழனிசாமியின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?

ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா? செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா? ஆதிவாசி... அடக்கி வாசி" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.