குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே பரவும் பொன்னுக்கு வீங்கி எனப்படும் மம்ப்ஸ் நோயானது பாரமைக்ஸோ வைரஸால் பரவுகிறது. இது காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.
மேலும், தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் ஏற்படுகிறது. பொன்னுக்கு வீங்கி நோயானது அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் திவலைகள் மூலம் பிறருக்கு பரவும் அபாயம் உள்ளது. ஒரு வாரத்திலிருந்து 3 வாரம் வரை அந்த பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த பாதிப்பு சரிசெய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டுகளில் வெறும் 61 பேருக்கு மட்டுமே பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் 2022-23 ஆம் ஆண்டுகளில் 129 பேருக்கும், 2023-24 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து ஆயிரத்து 91-ஆக அதிகரித்துள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படும் நிலையில் எம்.எம்.ஆர். எனப்படும் தட்டம்மை, மம்ப்ஸ், ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை.
மேலும் படிக்க: பயணிகளிடம் அத்துமீறிய அரசு பேருந்து நடத்துநர்.. கழுத்தை பிடித்து கீழே தள்ளி அராஜகம்
தடுப்பு மருந்துகளைக் காட்டிலும், நோய் எதிர்ப்பாற்றலே இத்தகைய பாதிப்பை சரி செய்துவிடும் என்பதால் இதுவரை இந்த தடுப்பூசிகள் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசியையும் தேசிய அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசை பொதுசுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.