மானாவாரி நிலங்களில் கோடை உழவு: மானியத் தொகையினை அறிவித்தார் அமைச்சர்
மானாவாரி நிலங்களில் பருவமழையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், கோடை உழவு மேற்கொள்ள மானியம் வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்றையத் தினம் வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நடப்பு வேளாண் பட்ஜெட்டிற்கு மொத்தம் ரூ.45,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கோடை உழவுக்கு மானியம் வழங்குவது தொடர்பான அறிவிப்பினை பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே. பட்ஜெட் உரை விவரங்கள் பின்வருமாறு-
பயிர் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியினை உயர்த்திட சிறப்புத் தொகுப்புத்திட்டம்:
”தமிழ்நாட்டில் டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் சராசரியாக 34 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியினை உயர்த்திட டெல்டா அல்லாத மாவட்டங்களில் சிறப்புத் தொகுப்பு உழவர்களுக்கு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றுக்கு 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதேபோல், டெல்டா மாவட்டங்களில் சராசரியாக 18 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறுவைப்பருவத்தில், நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியினை உயர்த்திட, டெல்டா மாவட்டங்களில் சிறப்புத் தொகுப்பு உழவர்களுக்கு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றுக்கு 58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.”
மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்வதை ஊக்குவிக்கும் திட்டம்:
”முற்காலத்தில், உழவு மேற்கொள்வது "பொன்ஏர் பூட்டுதல்", "சித்திரமேழி வைபவம்","மதி ஏர்", "நல்லேர்" எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் ஆட்சி செய்த காலங்களில், சித்திரை முதல் நாளில் பொன்ஏர் உழவு என்பது பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது. "நான் முதலில் ஓர் உழவன், அதற்கு அடுத்துதான் மன்னன்" என்று பறைசாற்றும் விதமாகவும், கோடை உழவின் அவசியத்தை எடுத்துக்கூறும் வகையிலும், அந்நாளில் பொன்ஏர் உழவை மன்னர்கள் தொடங்கி வைப்பார்களாம். தற்போதுள்ள வேளாண் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், கோடை உழவு செய்வது பரவலாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 56 இலட்சத்து 41 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் பருவமழையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே, 2025 2026-ஆம் ஆண்டில் 3 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்திட, எக்டருக்கு 2,000 ரூபாய் வீதம் மானியம் வழங்கிட, 24 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read more: கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு- வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
What's Your Reaction?






