கோமியம் மிகப்பெரிய மருந்து.. நோய்களை குணப்படுத்தக்கூடியது- ஐஐடி இயக்குநர் காமகோடி
கோமியம் என்பது மிகப்பெரிய மருந்து என்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியது என்றும் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிறப்பு ஆராதனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சென்னை ஐ ஐ டி இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோ பூஜையில் பங்கேற்றார்.
அதன்பின் காமகோடி பேசியதாவது, மாடு புல் தின்று பால், தயிர், வெண்ணெய் என அனைத்தும் கொடுக்கிறது. இதில் இருப்பது போல முதலீடு செய்து இலாபம் பெரும் தொழில் என்பது வேறு எதிலும் பார்க்க முடியாது. கோ சம்ரக்சனம் என்பது மதம் சார்ந்தது இல்லை , மாடுகள் மூலமாக வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தும் உள்ளது.
நான் ஒரு இயற்கை விவசாயி , எனது குடும்பத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். அப்போது நான் அது குறித்து ஆராய்ச்சி செய்தபோது அவர்கள் உட்கொண்டு வந்த உணவில் விஷம் இருந்தது தெரியவந்தது. அதாவது பெர்ட்டிலைசர் ( செயற்கை ) விவசாயம் மூலமாக உற்பத்தியாகும் உணவுகள் நஞ்சு கலந்தவையாக இருந்தது.
நான் அதனை மாற்ற முடிவெடுத்தேன். ஐஐடி-யில் இருந்து வரும் சம்பளத்தை மையமாக வைத்து நான் அதில் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என முயற்சி செய்தேன். செயற்கை உரத்தால் மண்வளம் மாரிய நிலையில் மாடுகள் மூலம் விவசாயம் செய்யும் பணியில் இறங்கினேன். தற்போது 8 வருட காலம் பழைய நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு உகந்ததாக மாற்றினேன்.
மாட்டை வைத்து நம்மால் பட்ஜெட் விவசாயம் செய்ய முடியும். மாட்டின் மூலம் வரும் சாணம், கோமியம் ஆகியவற்றை நிலத்தில் போடுகிறோம். அதன்பின் இயற்கையான முறையில் அரிசிக்கு நெல் விதைக்கிறோம். தற்போது நான் போட்ட முதலீடு ஒரு லட்சம் ஆனால் எனக்கு வந்த லாபம் 2.5 லட்சம் ஆகும். நாட்டு பசுவை நாம் அதிகம் பெருக்க வேண்டும். அதில் இருந்து கிடைக்கும் பலன் என்பது அதிகம். நாட்டு மாடு அழிந்து வரும் இனமாக மாறி வருகிறது. அதில் வரும் சாணம், பால், கோமியம் ஆகியவை இயற்கை விவசாயத்திற்கு மிக மிக முக்கியம்.
பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது விவசாயம், விவசாயத்தின் முக்கிய கூறாக நாட்டு மாடு இருக்கிறது. அதனால் நாட்டு மாடுகளை நாம் பாதுகாக்க வேண்டும். கோமியம் என்பது பெரிய மருந்து, பினி நீங்கும் , பயோ கேஸ் மூலம் சாணத்தை பயன்படுத்தி 15 வருடங்கள் எங்கள் கிராமங்களில் உணவு செய்து உண்டுள்ளோம். மத்திய அரசு திட்டத்தினால் 2014-இல் இருந்த இயற்கை விவசாயம் என்பது 18 லட்சம் ஹெக்டேர் இயற்கை விவசாயமாக தற்போது உயர்ந்துள்ளது.
பரம்பராக்ய கிருஷி விகாஸ் யோஜனா உள்ளிட்ட ஐந்து திட்டங்களை இயற்கை விவசாயத்திற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. உழவன் தான் நமக்கு எல்லோருக்கும் முக்கியம், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். கோ சாலை ஆட்டோமேஷன் (Automation) எனும் திட்டம் மூலம் இன்னும் ஒரு வருடத்தில் ஆராய்ச்சி செய்து, வராட்டி தயாரிப்பது, விபூதி தயாரிப்பது ஆகியவைகளை எளிமை ஆக்குவோம் என்றார்.
What's Your Reaction?