Mankatha2: “விஜய்-அஜித் கூட்டணியில் மங்காத்தா 2.. டிஸ்கஷன் நடந்துச்சு” ட்விஸ்ட் வைத்த வெங்கட் பிரபு!
அஜித் இல்லாமல் மங்காத்தா இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, அதில் விஜய்யும் நடிப்பாரா என்பது குறித்து சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், அஜ்மல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள கோட் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் மூவியாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் Spy கேரக்டரில் நடித்துள்ளார். விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
கோட் வெளியாக இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக கோட், மங்காத்தா படத்தை விட 100 மடங்கு பெட்டராக இருக்க வேண்டும் என அஜித் தன்னிடம் கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். விஜய்யின் கோட் படம் குறித்து அஜித் இப்படி பேசியிருந்தது, இருதரப்பு ரசிகர்களுக்கும் செம வைப் கொடுத்திருந்தது. ஆனால், அதைவிடவும் இன்னொரு தரமான அப்டேட் கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.
அஜித் – வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான மங்காத்தா திரைப்படம் குறித்து சொல்லவே வேண்டாம். இப்போதும் கோலிவுட் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் கேங்ஸ்டர் படங்களில் மங்காத்தாவுக்கு கண்டிப்பாக இடம் உண்டு. மங்காத்தா ரிலீஸான நேரத்தில், இந்தப் படத்தை பார்த்துவிட்டு அர்ஜுன் கேரக்டரில் நானே நடித்திருப்பேன் என விஜய் ஓபனாக ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார். அப்போதே விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடிக்க ஓகே சொன்னால், என்னிடம் கதை இருக்கிறது என வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
அதனால், தளபதி 68 அப்டேட் வெளியான போது, இதில் விஜய் – அஜித் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், கோட் படத்தில் அது நடக்காமல் போய்விட்டது. இந்நிலையில், கோட் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கும் பப்ளிசிட்டி செய்யப்பட்டது. அப்போது மங்காத்தா 2ம் பாகம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மங்காத்தா 2ம் பாகத்தில் அஜித் இல்லாமல் வேறொரு நடிகரை வைத்து இயக்கினால், ரசிகர்களே என்னை அடி வெளுத்து விடுவார்கள் என்றார்.
அதேபோல், விடாமுயற்சி படப்பிடிப்பின் போது அஜர்பைஜானில் இருந்த அஜித்தை சந்தித்து அடுத்தடுத்த ப்ராஜெக்ட் பேசினேன். அதில் மங்காத்தா 2ம் பாகமும் உள்ளது. நான் மங்காத்தா 2ம் பாகம் இயக்க ரெடியாக இருப்பது அஜித்துக்கு தெரியும். முக்கியமாக அதில் அஜித் – விஜய் இணைந்து நடிக்க வேண்டும் என நான் விரும்புவது, அவர்கள் இருவருக்குமே நன்றாக தெரியும். அதனால் அஜித், விஜய் மனது வைத்தால் மங்காத்தா 2ம் பாகம் உருவாகும் என்பதாக சூசகமாக தெரிவித்தார் வெங்கட் பிரபு.
மேலும் படிக்க - இப்ப கார் ரேஸ் முக்கியமா..? இயக்குநர் அமீர் ஆதங்கம்!
வெங்கட் பிரபு கொடுத்துள்ள இந்த அப்டேட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஆனால், விஜய் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார், அதோடு சினிமாவில் இருந்தும் விலகவுள்ளார். இதனால் மங்காத்தா 2ம் பாகத்துக்கு அஜித் ஓகே சொன்னாலும், விஜய்யிடம் இருந்து க்ரீன் சிக்னல் வருமா என்பது சந்தேகமே.
What's Your Reaction?