’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.. சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் போலீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை.
சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை ரவுடியான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, சிடி மணி உட்பட மொத்தம் 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 25 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களை மாறி மாறி காவலில் எடுத்து, செம்பியம் தனிப்படைப் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி திருவேங்கடம் ஜூலை 14ஆம் தேதியும், ரவுடி சீசிங் ராஜா, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியும், போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட ரவுடி சம்போ செந்தில், பாம் சரவணன், மற்றும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக சென்னை தனிப்படை போலீசார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் போலீசார், நேற்று [அக்டோபர் - 03] எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில், கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலையும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். 3வது குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் மகனும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை சேர்த்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன் பகையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணம் என்று குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான ரவுடி கும்பல்களுக்கு ஒவ்வொரு விதமான முன் பகை இருந்தது. இதில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலுக்கும் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை என்பதனை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்போ செந்தில் குடும்பத்தோடு ராயபுரத்தில் வசித்து வந்தார். சம்போ செந்திலின் தந்தை 2002இல் தலைமைச் செயலக காலனி குடியிருப்பு பகுதியில் ஒரு இடத்தை வாங்கினார். அந்த இடத்திற்கு அருகே உள்ள இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்ததாக கூறி ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு பிரச்சனை செய்ததாக தெரிகிறது.
"இது எங்களது இடம்" என கட்டப் பஞ்சாயத்து செய்து ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அறிந்த சம்போ செந்தில் தனது தந்தைக்காக பஞ்சாயத்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இடத்தை காலி செய்வோம் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மிரட்டியதாக தெரிகிறது.
அதன் பிறகு பலகட்ட பேச்சுவார்த்தை பிறகு 12 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அன்று முதலே சம்போ செந்தில்- ஆம்ஸ்ட்ராங் இடையே பகை தொடங்கியது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதை மனதில் வைத்துக்கொண்டு ஆம்ஸ்டாராங் கொலைக்கு சம்போ செந்தில் தனது சொந்த பணமான 4 லட்சத்தை செலவிட்டதும், மற்றுவர்கள் மூலமாகவும் பணத்தை ஏற்பாடு செய்து கொலை திட்டத்திற்கான பணத்தை கொடுத்தது தொடர்பாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை. இன்னும் ஓரிரு தினங்களில் சென்னை காவல்துறை விமானம் மூலமாக துபாய்க்கு செல்ல உள்ளனர்.
மேலும் படிக்க: நோபல் பரிசை தட்டிச்சென்ற அமெரிக்க விஞ்ஞானிகள்.. எதை கண்டுப்பிடித்தார்கள் தெரியுமா?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ2 வாக குற்றப்பத்திரிகையில் சம்போ செந்தில் பெயரை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரெட் கார்னர் நோட்டீஸ் சம்போ செந்திலுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






