Jeffrey Vandersay : இந்திய அணி தோல்விக்கு இவர்தான் காரணம்.. ஓப்பனாக பேசிய ரோகித் சர்மா!

Rohit Sharma on Jeffrey Vandersay in IND vs SL 2nd ODI Match : ''மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்ய ஆடுகளம் கடினமாக இருந்தது. இதனால்தான் பவர்பிளேயில் அதிரடியாக ஆடினோம். ஆனால் அதை வெற்றியாக மாற்ற முடியவில்லை'' என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Aug 5, 2024 - 07:17
Aug 5, 2024 - 12:11
 0
Jeffrey Vandersay : இந்திய அணி தோல்விக்கு இவர்தான் காரணம்.. ஓப்பனாக பேசிய ரோகித் சர்மா!
Rohit Sharma on Jeffrey Vandersay in IND vs SL 2nd ODI Match

Rohit Sharma on Jeffrey Vandersay in IND vs SL 2nd ODI Match : இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரு 50 ஓவர் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இதில் மூன்று டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை வொயிட்வாஷ் செய்தது. கொழும்புவில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டி யாருக்கும் வெற்றி, தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி(India vs Sri Lanka 2nd ODI Match) கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில், 9 விக்கெட் இழந்து  240 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 136/6 என பரிதவித்த இலங்கை அணியை கமிந்து மெண்டிஸ் (40 ரன்), துனித் வல்லெலகே (39) ஆகியோர் மீட்டனர். தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 40 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணியில் யாரும் அரைசதம் அடிக்கவில்லை. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 241 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியில் வெளுத்து கட்டினார். தனது டரேட் மார்க் ஷாட்களை விளையாடிய ரோகித் சர்மா பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசித் தள்ளினார். மறுபக்கம் சுப்மன் கில் நிதானம் காட்டினார்.

ஸ்கோர் 13.3 ஓவர்களில் 97 ரன்களை எட்டியபோது, அதிரடி அரைசதம் விளாசிய ரோகித் சர்மா 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 44 பந்தில் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதுவரை இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது. இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

அதன் பின்னர் ஷிவம் துபே (0), விராட் கோலி (14), ஷ்ரேயாஸ் ஐயர் (7), கே.எல்.ராகுல் (0) என அடுத்தடுத்து இலங்கை பவுலர் ஜெஃப்ரி வாண்டர்சே அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அவுட் ஆனார்கள். இறுதி கட்டத்தில் அக்‌ஷர் பட்டேல்44 ரன்கள் எடுத்து  ஓரளவு ஆறுதல் அளித்தபோதும் அது வெற்றிக்கு உதவவில்லை. முடிவில் இந்திய அணி 42.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இலங்கை அணி தரப்பில் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார். இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ''நீங்கள் வெற்றி பெற விரும்பினால் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இதை நாங்கள் செய்ய தவறி விட்டோம். நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணமாகும். அதே வேளையில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது. இலங்கை வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை பறித்து விட்டார். 

மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்ய இந்த ஆடுகளம் கடினமாக இருந்தது. இதனால்தான் பவர்பிளேயில் அதிரடியாக ஆடினோம். ஆனால் அதை வெற்றியாக மாற்ற முடியவில்லை. இந்த ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்வது மிகவும் முக்கியம்'' என்று தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow