சிங்கப்பூரில் பட்டுப்புழு, வெட்டுக்கிளி உள்ளிட்ட 16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.
சுமார் 59 லட்சம் பேர் வசிக்கும் சிங்கப்பூரில் 37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சீனர்கள் மற்றும் சீன பூர்விக குடிகள் ஆவர். சிங்கப்பூர் மக்கள் உணவாக உட்கொள்ள ஏற்கனவே சில பூச்சி இனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பட்டுப்புழு வெட்டுக்கிளி உள்ளிட்ட 16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து அந்த நாட்டு அரசு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த சிங்கப்பூர் உணவக உரிமையாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காடுகளில் வாழும் பூச்சிகளை உணவாக பயன்படுத்தக் கூடாது என்றும் மாறாக பண்ணைகளில் வளர்க்கும் பூச்சிகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிகளை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பூச்சிகளை கொண்டு சுவைமிகு உணவு தயாரித்து வாடிக்கையாளர்களை கவர சிங்கப்பூர் உணவகங்கள் தயாராகி விட்டன. இதற்காக சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பூச்சி பண்ணைகளில் இருந்து பூச்சிகளை அவைகள் இறக்குமதி செய்ய உள்ளன.
இந்த பூச்சிகள் மற்றும் பூச்சி பொருட்கள் மனித நுகர்வுக்காக அல்லது உணவு உற்பத்தி செய்யும் விலங்குகளுக்கு கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 16 வகையான பூச்சிகள் நுகர்வுக்கான பச்சை விளக்கு பெறும் என்று கூறியிருந்தது. ஆனால் அந்த முடிவு பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இது குறித்து சிங்கப்பூரின் பிரபல உணவகத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களில் பலர், குறிப்பாக 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், மிகவும் தைரியமானவர்கள். அவர்கள் தங்கள் உணவு தட்டுகளில், முழு பூச்சியையும் பார்க்க விரும்புகிறார்கள். எனவே, நாங்கள் அவர்களுக்கு, தேர்வு செய்ய பல விருப்பங்களை வழங்குகிறோம்” என்று கூறியுள்ளார்.
பூச்சி அடிப்படையிலான உணவுகள் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, தனது வருவாயை சுமார் 30 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.