Disney Network Hacked : ரஷ்யாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஹேக்கிங் குழுதான் நல்பல்ஜ் (NullBulge). இது தன்னை ஒரு “ஹேக்டிவிஸ்ட்” குழுவாகத் தெரிவிக்கிறது. AI மூலம் பலவித கலைஞர்களின் படைப்புகள் திருடப்படுவது, கிரிப்டோகரன்சி உள்ளிட்டவற்றை எதிர்த்து இந்த ஹேக்கிங் குழு செயல்பட்டு வருகிறது. கிரியேட்டிவ் கலைஞர்களின் படைப்புகளை திருடுவது அல்லது கிரிப்டோகரன்சியை ப்ரோமோட் செய்வது போன்ற செயல்களை செய்யும் நிறுவனங்களின் இணையதளங்களை ஹேக் செய்து, அவற்றின் தரவுகளை இந்த ஹேக்கிங் கும்பல் திருடி உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மிகவும் பிரபலமான டிஸ்னி நெட்வொர்க்கிலேயே கை வைத்திருக்கிறது இந்த ஹேக்கிங் குழு. அண்மையில் டிஸ்னியின் உள் ஸ்லாக் சேனல்களிலிருந்து சுமார் 1.2TB அளவிலான தரவுகளை இந்த குழு திருடியுள்ளது. இதில் சுமார் 10,000 சேனல்களின் விரிவான தகவல்கள், வெளியிடப்படாத திட்டங்கள் குறித்த முக்கியமான தரவுகள், கோடிங், உள்நுழைவு சான்றுகள், பணியாளர்களின் சாட்-கள், குக்கிகள் உள்ளிட்டவை அடங்கும். திருடப்பட்ட இந்த தரவுகளை BreachForums என்ற இணைய பக்கத்தில் வெளியிட்ட இந்த குழு, பின்பு ஒரு சில மணி நேரங்களிலேயே அதனை நீக்கியுள்ளது. இருப்பினும் சில இணைய பக்கங்களில் இந்த தரவுகள் இப்போதும் காணப்படுகின்றன.
இந்த சம்பவம் குறித்து வெளிநாட்டு செய்தி நிறுவனமான CNN-க்கு மெயில் அனுப்பியிருந்த நல்பல்ஜ், டிஸ்னியை எப்படி ஹேக் செய்தோம் என விளக்கமளித்திருக்கின்றது. அதில், டிஸ்னியின் ஸ்லாக்கை குக்கீகளை வைத்திருந்த ஒரு நபர் மூலம் அணுகி, அதன் மூலம் ஹேக் செய்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும் டிஸ்னி நெட்வொர்க் தனது வாடிக்கையாளர்களை சரியாக நடத்துவதில்லை என்பதால் ஹேக் செய்தோம் என்றும் தெரிவித்துள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழல் குறித்து பேசிய ரோய் ஷெர்மன், மிட்டிகா செக்யூரிட்டியின் ஃபீல்ட் சி.டி.ஓ, ”டிஸ்னி போன்ற பெரிய பெரிய நிறுவனங்களின் தரவுகள் திருடுபோவது மிகவும் சாதாரனமான ஒன்று. பணத்துக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு டிஸ்னி போன்ற நிறுவனங்கள் இறையாகின்றன” என்றார். இதற்கு முன்பு cloud உள்ளிட்ட சில நிறுவனங்களின் தரவுகளும் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட்டில் மிகப் பெரிய ஸ்டூடியோவான டிஸ்னி, ஓடிடி யுகத்திலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஹாலிவுட் முதல் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழி படங்கள், வெப் சீரிஸ்களும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன. அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் வரிசையில் இந்தியாவில் அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட ஓடிடி தளமாக டிஸ்னி ப்ளஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.