உலகம்

இலங்கையை உலுக்கிய 'டிட்வா' புயல்: 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்!

'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையை உலுக்கிய 'டிட்வா' புயல்: 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்!
Sri Lanka
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல், இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான பேரிடராக மாறியுள்ளது. அந்நாட்டின் பெரும் பகுதியைச் சூறையாடிய இந்தப் புயல், மிகப் பெரிய உயிர்ச்சேதத்தையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்றுவரை (டிசம்பர் 1) உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

புயலின் தீவிரமும் பதிவான மழை அளவும்

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து 'டிட்வா' புயலாக வலுப்பெற்று, நவம்பர் இறுதியில் இலங்கையைத் தாக்கியது. இதனால் மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம் போன்ற வடக்கு மாகாணங்களிலும் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, மாத்தளை போன்ற பகுதிகளில் 56 செ.மீ. வரை மழை பதிவானது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவு

பெரு மழையின் காரணமாக, நாட்டின் பல முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கெலனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கொழும்புவின் வடக்கு பகுதி முழுவதுமாக வெள்ளத்தால் சூழப்பட்டது. தலைநகர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மறுபுறம், பதுளை, கேகாலை உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவுகளில் பல கிராமங்கள் முழுமையாகப் புதையுண்டு போயுள்ளன.

உயிர்ச் சேதமும் அவசரநிலைப் பிரகடனமும்

இன்றைய நிலவரப்படி, டிட்வா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயர அஞ்சப்படுகிறது.கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 1,275 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பேரழிவைச் சமாளிக்க, இலங்கையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மின்சாரம், குடிநீர், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகள் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள் மற்றும் இந்திய அரசின் உதவி

புயல் இலங்கையிலிருந்து விலகி, தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்தாலும், இலங்கையின் பல மாவட்டங்கள் இன்னும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன. 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை, ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மூன்று நாட்களில் வெள்ள நீர் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஆபரேஷன் 'சாகர் பந்து' என்ற பெயரில் நிவாரணப் பணிகளுக்காகச் சேட்டக் ஹெலிகாப்டர்கள் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகளை இந்திய விமானப் படையினர் மீட்டு, திருவனந்தபுரம் வழியாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.