உலகம்

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் செல்போன்.. ஜப்பானில் புதிய கட்டுப்பாடு!

மக்கள் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்ஃபோனை பயன்படுத்த வேண்டும் என டோக்கியோ மேயர் அறிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் செல்போன்.. ஜப்பானில் புதிய கட்டுப்பாடு!
Smartphone usage restriction in Japan
ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள டொயோக்கே நகரில், மக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் மட்டுமே செல்போனைப் பயன்படுத்த வேண்டும் என புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடிமைத்தனத்தால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகளைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டு வரம்புகள்

டொயோக்கே மேயர் மசஃபுமி கோகி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த இரண்டு மணி நேர வரம்பு, வேலை அல்லது படிப்பு நேரத்திற்கு வெளியே மட்டுமே பொருந்தும். மேலும், கட்டுப்பாட்டை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாதவை என்று கூறிய அவர், சில மாணவர்கள் செல்போன் இல்லாமல் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும், பெரியவர்களும் செல்போன் பயன்பாட்டால் தூக்கத்தையும், குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தையும் தியாகம் செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த புதிய விதிமுறைகள் படி, சமைக்கும்போது வீடியோ பார்ப்பது, ஆன்லைன் கற்றல், அல்லது இ-ஸ்போர்ட்ஸ் போட்டிக்காகப் பயிற்சி செய்வது போன்ற பொழுதுபோக்கு அல்லாத செயல்களில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இந்த இரண்டு மணி நேர கணக்கில் சேராது.

அதேபோல், ஆரம்பப் பள்ளி மாணவர்கள் இரவு 9 மணிக்குள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும், வயதில் மூத்த மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் இரவு 10 மணிக்குள் பயன்பாட்டை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் கருத்து

இதுகுறித்து ஒரு ஜப்பான் செய்தி நிறுவனம் மக்களிடம் மேற்கொண்ட கருத்து கணிப்பில், 80% மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் மக்கள், இரண்டு மணி நேரத்தில் ஒரு படத்தை கூட பார்க்க இயலாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.