Hezbollah Drone Strike on Israel Soldiers : இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளில், இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியமான தலைவர்களை குறிவைத்து, இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் தற்போதைய வான்வழி தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகத்திலும், அதன் அருகிலுள்ள ஐநா அமைதிப்படை தளம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐநா அமைதிப்படையின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்கும் விதமாக, ஈரான் உதவியுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா ஆதரவு அளித்து வருகிறது. இதனையடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரம் இஸ்ரேலின் தரைவழி படைகள், ஐநா அமைதி குழு தலைமை தலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (அக்.13) ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் ராணுவ தளத்தில் ஆளில்லா விமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் பலியானதோடு 65க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் துயரை ராணுவம் பகிர்ந்து கொள்கிறது. அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளது.