வீடியோ ஸ்டோரி

பாலியல் தொல்லை: பெண் கொலையில் திருப்பம் வெளியான அதிர்ச்சி தகவல்!

திமுக ஊராட்சிமன்றத் துணைத் தலைவரின் மனைவி, வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்திற்கு நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், பாலியல் தொல்லைக்கு பழிக்குப் பழியாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

பாலியல் தொல்லை:  பெண் கொலையில் திருப்பம்  வெளியான அதிர்ச்சி தகவல்!
பாலியல் தொல்லை: பெண் கொலையில் திருப்பம் வெளியான அதிர்ச்சி தகவல்!

திருப்பத்தூர் மாவட்டம் கோ.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. திமுக ஊராட்சிமன்ற துணைத் தலைவரான திருப்பதியையும், அவரது மனைவி வசந்தியையும், மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்தத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வசந்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த திருப்பதி, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வெளியான முதற்கட்ட தகவலில், நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சொல்லப்பட்டது.  

இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில், மூன்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது திருப்பதியின் மனைவி வசந்திக்கு, தங்கை ஒருவர் இருக்கிறார்.  இவருக்கு திருமணமாகி வாணியம்பாடியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனால், இவரது கணவர் மாற்றுத்திறனாளி என்பதால், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார் திருப்பதி. மாற்றுத்திறனாளியை கட்டிக்கொண்டு என்ன செய்வாய்? என்னுடன் வந்து வாழு எனக் கூறி, வசந்தியின் தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் திருப்பதி. 

ஒருகட்டத்தில் திருப்பதியின் டார்ச்சர் எல்லை மீறி போகவே, இந்த கொடுமையை தனது மகன் ரேனுவிடம் கூறியுள்ளார் அவர். இதனால் ஆத்திரமான ரேனு, ஓசூரைச் சேர்ந்த தனது நண்பன் கெவினிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் திருப்பதியின் வீட்டிற்குச் சென்று, தனது தாயிடம் மரியாதையாக நடந்து கொள்ளுமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதத்தில் தொடங்கிய இந்த தகராறு கை கலப்பாக மாறவே, ரேனு தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து திருப்பதியையும் அவரது மனைவி வசந்தியையும் சரமாரியாக வெட்டியுள்ளார். வசந்தி தனது பெரியம்மா எனத் தெரிந்தும், அவரை கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளார் ரேனு.  

அதன்பின்னர் இருவரும் ஓசூருக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஆனாலும் சிசிடிவி காட்சிகளை வைத்து ரேனுவையும், அவனது கூட்டாளி கெவினையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தாங்கமுடியாமல், மகன் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.