தமிழ்நாடு

ஏர்போர்ட், மெட்ரோ ரயிலில் வேலை.. ஏமாந்த வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

விமான நிலையிம், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏர்போர்ட், மெட்ரோ ரயிலில் வேலை.. ஏமாந்த வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பெண் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி தாலுக்கா, உசிலங்காடு பகுதியில் வசித்து வரும் ஷியாம் சுந்தர், வ/27, த/பெ.ராஜேந்திரன் என்பவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த நிலையில், 2018ம் ஆண்டு வேலை தேடி வந்துள்ளார்.

அப்போது, சென்னை. வடபழனி, பஜனை கோயில் 2வது தெருவில் AA Manpower Solutions என்ற தனியார் நிறுவனம் MNC நிறுவனங்களில் நல்ல வேலை வாங்கி தருவதாக கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனையடுத்து, 2018ஆம் ஆண்டு ஷியாம் சுந்தர் தனது தாயாருடன் சென்னைக்கு வந்து, வடபழனியில் உள்ள மேற்படி நிறுவனத்திற்கு சென்று அதன் உரிமையாளர் லதீஷ் மேரி என்பவரிடம் வேலை குறித்து பேசினர்.

அப்பொழுது லதீஷ் மேரி முதலில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும், பின்னர் சில மாதங்கள் கழித்து விமான நிலையத்தில் அதிகாரி வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து மலேசியாவில் வாங்கி தருவதாகவும் கூறி 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை சிறிது சிறிதாக என மொத்தம் ரூ.19 லட்சம் பணத்தை ஷியாம் சுந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.

ஆனால் வதீஷ்மேரி கூறியபடி வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், 2023ம் ஆண்டு ஷியாம் சுந்தர் மேற்படி லதீஷ்மேரியிடம் எங்களது பணத்தை கொடுங்கள் என வற்புறுத்தி வந்த நிலையில், லதீஷ்மேரி பல தவணைகளாக ரூ.5,75,000/- பணத்தை ஷியாம் சுந்தருக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் 24.04.2023 அன்று ஷியாம் சுந்தரின் தாயார் லதிஷ் மேரியை செல்போனில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு தர வேண்டிய மீதி பணம் ரூ.13,25,000/-ஐ தரும்படி கேட்டபோது. லதிஷ் மேரி பணத்தை தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் எனக் கூறி தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்தார்.

இதனையடுத்து, ஷியாம் சுந்தர் வடபழனியில் உள்ள மேற்படி லதிஷ்மேரியின் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு சென்றபோது, அந்நிறுவனம் காலி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது. எனவே, வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த லதிஷ்மேரி மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்று தரும்படி ஷியாம் சுந்தர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், மோசடி வழக்கில் லதிஷ்மேரியை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.