What is Right Age To Conceive Tips : முந்தைய காலத்தில் பருவமெய்துவதற்கு முன்பாகவே பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. நாளடைவில் நம் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்களால் குழந்தைத் திருமணம் முறை ஒழிக்கப்பட்டது. தற்போது பெண்ணின் திருமண வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வேலைக்குச் சென்று பொருளீட்டுகின்றனர். சமூகப் பொருளாதாரத்தில் பெண்களும் முன்னேறி விட்ட சூழலில் அவர்களால் இள வயதில் திருமணம் செய்ய முடிவதில்லை. அவர்கள் சார்ந்திருக்கும் துறையில் நல்ல இடத்தைப் பெறும் முனைப்போடு வேலை செய்கின்றனர். இதனால் இள வயதில் திருமணம் செய்ய முடியாமல் போய் சராசரியாக 30 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வது சாதாரணம் ஆகி விட்டது. சமூக சூழல் என்னதான் மாறினாலும் இயற்கையில் நமது உடல் அமைப்பின் படி 30 வயதுக்குக்கு மேல் திருமணம் செய்து கொண்டு கருத்தரிப்பது சரியானதா என்பது குறித்து நம்மிடம் விளக்குகிறார் பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நிவேதிதா காமராஜ்...
“பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்கிற அடிப்படையில் அனைத்துத் துறைகளிலும் இன்றைக்குப் பெண்கள் வந்து விட்டனர். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சமூகம் வகுத்திருக்கும் விதிகளை உடைத்துதான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சமூகத்தின் விதிகளை வேண்டுமானால் மாற்றியமைக்கலாமே தவிர இயற்கையின் விதியை நம்மால் மாற்ற முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கருத்தரிப்பதற்கும் வயதுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. என்னதான் நம்மை இளமையாக வைத்துக் கொண்டாலும் வயது முதிர்வதை நம்மால் தடுக்கவே முடியாது. வயது ஆக ஆக கருமுட்டைகளின் வயதும் அதிகமாகி அதன் தரம் குறையும். 25 வயதில் இருக்கும் கருமுட்டைகளின் ஆரோக்கியமும், தரமும் 32 வயதில் இருக்காது.
பெண்கள் பிறக்கும்போதே 2 மில்லியன் கருமுட்டைகளுடன் பிறக்கின்றனர் 32 வயதுக்கு மேல் முட்டைகளின் எண்ணிக்கை அதிகம் குறையும். பெண்கள் பிறக்கும்போதே 2 மில்லியன் கருமுட்டைகளுடன் பிறக்கிறார்கள். அவைதான் அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும். அந்த கருமுட்டைகள்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாதவிடாய் சுழற்சியில் வெளியேறுகின்றன. அப்படியாக வயது ஆக ஆக அதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். 32 வயதைக் கடந்து விட்டால் கருமுட்டைகள் வெளியேறும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்தக் காரணத்தினால்தான் இள வயதிலேயே கருத்தரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இள வயதில் கரு முட்டைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதோடு நல்ல தரத்திலும் இருக்கும்.
வயது அதிகமாகும்போது ஆணும் சரி, பெண்ணும் சரி நீரிழிவு, தைராய்டு, ரத்த அழுத்தம் போன்ற பல்வேறான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். அப்பிரச்னை காரணமாகவும் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். பெண்களுக்கு கருமுட்டையின் தரம் ஆண்களுக்கு விந்தணுவின் தரம் ஆகியவை இப்பிரச்னைகளால் குறைய வாய்ப்பிருக்கிறது. மரபு ரீதியான பிரச்னைகளும் இருக்கின்றன. முன்கூட்டியே கருத்தரிப்பைத் திட்டமிடுகையில் மரபு ரீதியில் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகளை அறிந்து அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட முடியும்.
கருத்தரிப்பதைப் பொருத்தவரை எல்லாமே ஹார்மோன் செயல்பாடுதான். பெண் உடலில் ஆண் ஹார்மோன், பெண் ஹார்மோன் ஆகிய இரண்டும் இருக்கும். இவை இரண்டும் நல்ல சுழற்சியில் இருந்தால்தான் கருமுட்டையின் தரம் நன்றாக இருக்கும். நல்ல தரத்தில் அவை வளர்ந்து வெடிக்கும்போதுதான் கருத்தரிப்பார்கள். ஆரோக்கியமான உடலில்தான் இந்த ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும். உடலில் உள்ள தசைகளுக்கும் கொழுப்புக்குமான விகிதாச்சாரம் சரியான அளவில் இருந்தால்தான் இந்த ஹார்மோன்களின் உற்பத்தி கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவே உடல் பருமனாகவும் இல்லாமல் மிக மெலிந்தும் இல்லாமல் சரியான உடல் அமைப்பில் இருக்க வேண்டும்.
21 வயது முதல் 28 வயது தான் கருத்தரிப்பதற்கு சரியான வயது. ஆகவே அனைவரும் இந்த வயதுக்குள்ளாக கருத்தரிக்கத் திட்டமிடுவது ஆரோக்கியமான குழந்தைப்பேறுக்கு வழிவகுக்கும். குழந்தைப் பேறுக்குத் திட்டமிட்டு விட்டாலே கொழுப்பு நிறைந்த ஜங்க் உணவுகளைச் சாப்பிடாமல், புரதம் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். மது, புகை உள்ளிட்ட பழக்கங்களை அறவே கைவிட்டு விட வேண்டும். நல்ல உணவுப்பழக்கத்தைப் பின்பற்றி, போதிய உடற்பயிற்சிகள் மேற்கொண்டு இள வயதில் கருத்தரித்தாலே ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அப்படியென்றால் 28 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளவே கூடாதா என்று கேட்டால் அப்படி இல்லை. 28 வயதுக்கு மேல் நம்மால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் அதில் சவால்கள் நிறைந்திருக்கும். ஆகவே முடிந்த வரை சீக்கிரத்தில் குழந்தைபெறுவது நல்லது.
கருமுட்டை பதப்படுத்துதல்
தனிப்பட்ட சூழல் காரணமாக திருமண செய்து கொள்ள 35 வயதுக்கு மேல் ஆகும் என்று நினைக்கிறவர்கள் கருமுட்டையைப் பதப்படுத்திக் கொண்டு செயற்கைக் கருவுறுதல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். எந்த வயதில் கருமுட்டையை எடுத்துப் பதப்படுத்துகிறர்களோ எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தக் கருமுட்டைக்கு அதே அயதுதான் இருக்கும். உண்மையில் இது நல்ல தொழில்நுட்பம்தான். எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டால், உங்களிடம் போதிய பொருளாதார வசதி இருந்தால் கருமுட்டையைப் பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.” என்கிறார் நிவேதிதா.