தமிழ்நாடு

சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: பொதுமக்கள் ஆத்திரம் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!

60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: பொதுமக்கள் ஆத்திரம் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!
சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: பொதுமக்கள் ஆத்திரம் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிங்காபுரம் கிராமத்தில், மூன்று தலைமுறைகளாகப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் இரவோடு இரவாக ஆக்கிரமித்து நெல் பயிரிட்டதால், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

காளிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களது கிராமத்திற்குச் செல்ல சுமார் 60 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சாலையை, கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்களான ரமேஷ், பூங்காவனம், மற்றும் சிவா ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்துக் கிராம மக்கள் கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

வருவாய் கோட்டாட்சியரின் விசாரணையில், அந்தப் பகுதி புறம்போக்கு நிலம் என்றும், அதனை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த எச்சரிக்கையை மீறி, நேற்று நள்ளிரவில் ரமேஷ், பூங்காவனம் மற்றும் சிவா ஆகியோர் இணைந்து சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், செய்வதறியாது இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய கிராம மக்கள், குடிநீர் தொட்டி, 100 நாள் வேலை திட்டம் போன்ற அரசின் திட்டங்கள் எங்கள் கிராமத்தில் உள்ளபோதும், மூன்று தலைமுறையாகப் பயன்படுத்திய சாலையை ஆக்கிரமித்துள்ளது நியாயமற்றது. இந்தச் சாலை இல்லாததால், விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை.

கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகளை அவசர காலங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், பள்ளி செல்லும் மாணவர்களும் சாலை வசதியின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று வேதனை தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் அவரிடமே ஒப்படைத்துவிடுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.