தமிழ்நாடு

UPSC தேர்வு...அசத்திய நான் முதல்வன் திட்ட மாணவர்கள்..வாழ்த்திய முதல்வர்

வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது

  UPSC தேர்வு...அசத்திய நான் முதல்வன் திட்ட மாணவர்கள்..வாழ்த்திய முதல்வர்
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
யுபிஎஸ்சி தேர்வில் அசத்தல்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 விதமான பதவிகளுக்காக ஆண்டு தோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இதனை யுபிஎஸ்சி நடத்துகிறது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். இதில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேர்முக தேர்வு முடிந்தது. இந்த நிலையில், யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

அதில் சக்து துபே, ஹர்ஷிதா காயல், கோங்ரே அர்சித் பராக் ஆகியோர் முதல் முன்று இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர்.இந்த நிலையில், நான் முதல்வன் திட்டம் போட்டித்தேர்வுகள் பிரிவு மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் தரவரிசையில் முதலிடமும், அகில இந்திய அளவில் தரவரிசையில் 23ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

முதலமைச்சர் வாழ்த்து

இதேபோல் நான்முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மோனிகா 39-வது இடத்தை பெற்றுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று 134 பேர் நேர்முக தேர்வுக்கு சென்றதில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தில் முழு நேர உரைவிட பயிற்சி மேற்கொண்டனர்.இந்த நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!” என பதிவிட்டுள்ளார்.