சென்னை: திருச்சியில் இருந்து நேற்று மாலை 5.40 மணிக்கு சார்ஜா நோக்கி போயிங் ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. திருச்சி விமான நிலைய ஓடுபாதையில் இருந்து டேக் ஆஃப் ஆகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது விமானிகளுக்கு தெரியவந்துள்ளது. அதாவது விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால், செய்வதறியாது திகைத்த விமானிகள், உடனடியாக திருச்சி விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு நிலைமையை விவரித்தனர். இந்த பிரச்சினை குறித்து முழுமையான தகவல்கள் தெரியாததால், விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து விமானத்தில் உள்ள எரிபொருள் முழுமையாக தீரும் வரை, சுமார் 3 மணி நேரம் வரை வானிலேயே வட்டமடித்தது. அதன்பின்னர் இரவு 8.15 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, இச்சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயமோ அல்லது உடல்நிலை பாதிப்போ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே விமானம் தரையிறக்கப்பட்டது. இருப்பினும் இச்சம்பவம் திருச்சி மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாதது ஏன் என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஹைட்ராலிக் பிரச்சினையால் தான் விமானத்தில் வீல்கள் சரியாக இயங்கவில்லை என சொல்லப்படுகிறது. விமானம் பறக்கத் தொடங்கியதும், சக்கரங்களை உள்ளே இழுக்க ஹைட்ராலிக் முறை பயன்படுத்தப்படும். ஆனால், ஹைட்ராலிக் அமைப்பில் இருந்து ஆயில் லீக்கானதால், விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை என சொல்லப்படுகிறது.
இன்னொரு தகவலில், விமானம் புறப்படும் முன்னர் ஊழியர்களால் முழுமையாக சோதனை செய்யப்படுமாம். அப்போது விமானம் பறக்கத் தொடங்கியதும், அதன் சக்கரங்கள் உள்ளே செல்வதற்கு வசதியாக அதில் இருக்கும் பின்-ஐ அன்லாக் செய்ய வேண்டுமாம். ஆனால், விமான நிலைய ஊழியர்கள் அந்த பின்-ஐ அன்லாக் செய்ய மறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை என்றும், மற்றபடி விமானம் தரையிறங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தான் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.