தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கு தெரியுமா?

சென்னை அண்ணாசாலையில் மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கு தெரியுமா?
Traffic changes in Chennai
சென்னையில் மெட்ரோ ரயில் மாற்றும் மேம்பாலம் கட்டுமான பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலம் கட்டும் பணியை எளிதாக்கும் வகையில், தேனாம்பேட்டை அருகே வரும் 17 ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றங்கள்

வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு;

அண்ணாசாலையில் உள்ள சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள், அண்ணாசாலை - எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, தியாகராய சாலை, மா.போ.சி. சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவா சாலை வழியாகச் சென்று மீண்டும் அண்ணா சாலையை அடையலாம்.

அண்ணா சாலை - எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, தியாகராய சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

தியாகராய சாலையில் உள்ள மா.போ.சி. சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, வடக்கு போக் சாலை, விஜயராகவா சாலை வழியாகச் சென்று அண்ணா சாலையை அடையலாம்.

தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.போ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவா சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம்.

அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவா சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது.

வாகன ஓட்டிகள் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைக்குமாறும், பயணங்களைத் திட்டமிடும்போது மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளுமாறும் போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.