தமிழ்நாடு

Diwali Leave: தீபாவளி கொண்டாட ரெடியா மக்களே... அரசு அறிவித்த போனஸ் லீவு... டக்குன்னு Plan-அ மாத்துங்க!

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 01.11.2024 அன்று விடுமுறை வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Diwali Leave: தீபாவளி கொண்டாட ரெடியா மக்களே... அரசு அறிவித்த போனஸ் லீவு... டக்குன்னு Plan-அ மாத்துங்க!

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. கிருஷ்ண பெருமான் நரகாசுரனை வதம் செய்யும் நாளே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாளன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கடவுளை வழிபடுவது வழக்கம். இதனையடுத்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டாசுகள் வெடித்தும், விதவிதமான பலகாரங்கள் சாப்பிட்டும் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடுவர்.

அதன்படி இந்த ஆண்டு வருகிற 31ம் தேதி இப்பண்டிகை மிகக் கோலாலகமாகக் கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை அன்று தீபாவளி வருவதால் அன்று அரசு விடுமுறை ஆகும். இதையடுத்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஏற்கனவே விடுமுறை நாட்கள்தான். இதற்கு இடையில் இருக்கும் வெள்ளிக்கிழமையையும் விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

தற்போது இந்த கோரிக்கையை கருத்தில் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு மறுநாளான (நவ. 1) வெள்ளிக்கிழமையையும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும். அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் மிகவும் குஷியில் இருக்கின்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால் சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் மக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் ஜவுளி கடைகளிலும், பட்டாசுக் கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகின்றன. சென்னையின் முக்கிய ஷாப்பிங் ஏரியாக்களான தி.நகர், பாண்டி பஜார், சவுக்கார்பேட்டை, பல்லாவரம் மக்கள் கூட்டத்தில் திக்கித் திணறி வருகின்றன. 

சென்னையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. இருப்பினும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் ஒரே நாளில் சாலைகள், சுரங்கங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது சென்னையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மக்கள் தீபாவளி ஷாப்பிங்கில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.