ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் நிறைவடைய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்பதால் வரும் கோடை விடுமுறையை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களை அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சாதாரண பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் கொடைக்கானலில் 50 இருக்கை கொண்ட பேருந்துகளை மலை மீது செல்ல தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஊட்டி கொடைக்கானலில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐஐடி ஐஐஎம் மேற்கொண்டு வரும் ஆய்வு முடிவடைய ஒன்பது மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, ஊட்டி கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்ற ஆய்வு முடியும் வரை, எதிர்வரும் கோடை காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும் வாகன கட்டுப்பாடு விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, ஊட்டியில் வார நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், கொடைக்கானலில் வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலகளிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், அரசு பேருந்துகள், ரயில்கள் மூலம் வருகை தரும் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர். ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அது அமல்படுத்தியது குறித்து ஏப்ரல் 25ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த கட்டுப்பாடுகள் ஜூன் வரை அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள், வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு தேவையான கூடுதல் காவல்துறையினரை பணியில் அமர்த்துவதற்கு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.மேலும் ஊட்டி கொடைக்கானலுக்கு வரும் மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.