ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி இன்று மாலை 'வெட்டன் மனை' கிராம மக்கள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திடீரென்று சாலை மறியல் செய்தனர். புனித தலமாக கருதப்படும் ஏர்வாடியில், இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கு அருகே அரசால் நடத்தப்படும் மதுபான கடையும் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் பெரும் இடையூறு இருந்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது. குறிப்பாக இந்த கடைக்கு மது வாங்க வரும் மது பிரியர்கள் வேகமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி மாணவர்களும் காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கு அருகிலேயே அலங்கோலமான நிலைகளில் மது பிரியர்கள் படுத்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த கடையை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று மாலை திடீரென அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும், பெண்களும், பொதுமக்களும் என ஏராளமானோர் கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து கடையை சுற்றிலும் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த ஏர்வாடி காவல் துறையினர், 'எங்களிடம் அனுமதி பெறாமல் நீங்கள் போராட்டம் நடத்தக்கூடாது' என வாக்குவாதம் செய்தனர். அரசு பள்ளிக்கு அருகே மாணவர்களுக்கு இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு என்ன வழி என்று யோசிக்காத போலீசார், அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்தியது தவறு என குற்றம் கூறுவதிலேயே குறியாக இருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து, 'எங்களிடம் அனுமதி பெற்று இனி ஒரு நாள் போராட்டம் நீங்கள் நடத்திக் கொள்ளலாம்'. இப்போது இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்' என காவல்துறையினர் வற்புறுத்தியதை தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண்களும், பொதுமக்களும், பெற்றோர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.