தமிழ்நாடு

மத்திய அரசு சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் உள்ளது - திமுக எம்.எல்.ஏ பேச்சு

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசு சொல்லக்கூடிய ஒரு சிலவற்றை கேட்க வேண்டிய அவசியம் இருக்கின்றது என ஈரோடு கிழக்குத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் உள்ளது - திமுக எம்.எல்.ஏ பேச்சு
மத்திய அரசு சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் உள்ளது - திமுக எம்.எல்.ஏ பேச்சு

கோயமுத்தூர் மற்றும் திருச்சி மாநகராட்சிகளை விட  ஈரோடு மாநகராட்சியில் பல மடங்கு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் புகார்  தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக வருகிற 14 ம் தேதி பாஜக சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டு இருந்த்து.

இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உடனான அவசர கூட்டம் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக  ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் கலந்து கொண்டார்.
இந்தக்கூட்டத்தில் கோவை , திருச்சி ஆகிய மாநகராட்சியை விட  சொத்துவரியை குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் , 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு வரிவிதிப்பு செய்யப்பட்ட சொத்துவரி  உயர்வை  இரத்து செய்ய வேண்டும் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாமன்ற உறுப்பினர்கள் சொத்துவரியை குறைக்கக்கோரி  ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை , நிச்சயமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் இதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்,  மறைமுகமாக மத்திய அரசு கொடுத்த நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் இந்த வரி உயர்வு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் , மத்திய அரசை சார்ந்து அனைத்து விஷயங்களையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஒரு சிலவற்றை கேட்க வேண்டிய அவசியம் இருக்கின்றது என்றார்..