தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் திருட்டு.. முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்குகள் மாயம்!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள் மற்றும் 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஆளுநர் மாளிகையில் திருட்டு..  முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்குகள் மாயம்!
தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு!
தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் (ராஜ்பவன்) உள்ள சுதர்மா பவனில் நடந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14ம் தேதி ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் பொருட்கள் கலைந்து கிடந்ததால் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில், ஒரு மர்ம நபர் ஹெல்மெட் அணிந்து அங்கு நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெளிவாகக் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ராஜ்பவன் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.திருடப்பட்ட ஹார்ட் டிஸ்குகளிலும் ஆவணங்களிலும் அரசு ரகசிய தகவல்கள் மற்றும் அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய பதிவுகள் உள்ளன என சந்தேகிக்கப்படுகிறது. இது பாதுகாப்பு அம்சங்கள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சம்பவம் குறித்து தகவலறிந்த ஹைதராபாத் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, ராஜ்பவனில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம நபர் யார்? எப்படி உயர்மட்ட பாதுகாப்பு சூழலில் உள்ள வளாகத்துக்குள் நுழைய முடிந்தது? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றது ஆளுநர் மாளிகை என்பதால், உயர் பாதுகாப்பு வாய்ந்த இடத்திலும் இது போன்று நடைபெறுவது, பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த வழக்கில், இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.