அம்மா உணவகத்தில் மளிகைப் பொருட்களை திருடியதாக புகாரில் 7 ஊழியர்களை இடமாற்றம் செய்ததால் ஸ்டோர் ரூமிற்கு பூட்டு போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாபுரம் பஜனை கோவில் தெருவில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வாளர் கோபிராஜ் என்பவர் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதே அம்மா உணவகத்தில் 10 வருடமாக பணி புரிந்து வரும் விஜயா என்பவர் அம்மா உணவகத்திலிருந்து வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை திருடியது தெரிய வந்தது. மேலும், திருடிய பொருட்களை விஜயா தனது மகன் சதீஷிடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதைத்தொடர்ந்து விஜயாவை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார். விஜயா அதிமுக அம்மா உணவக துணைத்தலைவியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அம்மா உணவகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றிய 7 பேரையும் இடமாற்றம் செய்ததால் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஸ்டோர் ரூமுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில், ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.