சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர் கோபால் ( 75 ) இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி வடபழனி முருகன் கோவில் அருகே, டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது,ரியல் எஸ்டேட் தரகர் என்ற பெயரில், கோடம்பாக்கம் முருகன் என்பவர் அறிமுகமானார்.
தனக்கு அறிமுகமான முருகன் என்பவர் தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தனியார் நகை கடை உரிமையாளரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து, கடந்த 14.12.2024 அன்று காலை, தி.நகர், உஸ்மான் ரோட்டில் உள்ள நகை கடையின் அருகே வரவழைத்துள்ளார்.
அப்போது, கோபால் கையில் அணிந்திருந்த 5 கிராம் தங்க மோதிரத்தை நகை கடையில் கொடுத்து, பாலிஸ் போட்டு திருப்பி தருவதாக கூறிவிட்டு, அதுவரை தன்னிடம் இருந்த 2 மோதிரத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி கோபாலின் தங்க மோதிரத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
வெகுநேரம் ஆகியும் முருகன் வராத காரணத்தினால், சந்தேகமடைந்த கோபால், அந்த 2 மோதிரத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது அது கவரிங் மோதிரங்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து கோபால், R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
R-1 மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து, மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிராம் தங்க மோதிரம் மீட்கப்பட்ட நிலையில், விசாரணையில் கைது செய்யப்பட்ட முருகன் என்பவர் மீது ஏற்கனவே ஏமாற்றுதல், திருட்டு உட்பட சுமார் 5 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட முருகனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் நேற்று (டிச.18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
முன்பின் தெரியாத நபரிடம் பணம், நகை உள்ளிட்ட எந்த பொருளையும் தரக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக உள்ளது.