தமிழ்நாடு

'காத்துவாக்குல 2 காதல்' பாணியில் காதலித்த இளைஞர்.. கொடூரமாக கொலை செய்த காதலி குடும்பம்

மகள் தற்கொலைக்கு காதலன் தான் காரணம் எனக் கருதி தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் காதலனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'காத்துவாக்குல 2 காதல்' பாணியில் காதலித்த இளைஞர்.. கொடூரமாக கொலை செய்த காதலி குடும்பம்
'காத்துவாக்குல 2 காதல்' பட பாணியில் காதலித்த இளைஞர்.. கொடூரமாக கொலை செய்த காதலி குடும்பம்

கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் தமிழ்செல்வன் கடந்த ஒரு வருடமாக ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய அம்மாவின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம்  அய்யன் கொல்லகொண்டான் கிராமத்திற்கு தமிழ்செல்வன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது  அந்த பகுதியைச் சேர்ந்த  மலைக்கனி என்பவரின் மகள் ஆனந்தி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனந்தியுடன் பழகிக் கொண்டிருக்கும் போதே தமிழ்செல்வன், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். 

'காத்துவாக்குல 2 காதல்' பட பாணியில் ஓட்டுநர் தமிழ்செல்வன் 2 பெண்களை காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக ஆனந்தியை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ஆனந்தி தற்கொலைக்கு தமிழ்செல்வன் தான் காரணம் என்று கருதிய அவரின் தந்தை மலைக்கனி மற்றும் அண்ணன் ராஜாராம் ஆகியோர் தமிழ்செல்வனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.  தொடர்ந்து, நேற்று இருவரும்  இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்திலிருந்து கோவைக்கு வந்துள்ளனர். 

இதையடுத்து, தமிழ்செல்வன் பணிப்புரியும் மருத்துவமனைக்கு வந்த ஆனந்தியின் தந்தையும், அண்ணனும் தமிழ்செல்வனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வெளியே வருமாறு அழைத்துள்ளனர். வெளியே வந்த தமிழ்செல்வனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று கத்தியால் கழுத்தை அறுத்தும், மார்பு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியும் கொலை செய்துவிட்டு இரு சக்கர வாகனத்திலேயே தப்பி சென்றுள்ளனர்.

இதை பார்த்த அங்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க அங்கு வந்து பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தமிழ்செல்வன் சடலத்தை கைப்பற்றிய துடியலூர் போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தப்பியோடிய தந்தை மற்றும் அண்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.