தமிழ்நாடு

முதலமைச்சருக்கு படங்களை பார்க்கவே பொழுதுகள் போதவில்லை – அன்புமணி விமர்சனம்

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவதுவீரமல்ல, கோழைத்தனம் என அன்புமணி கடும் விமர்சனம்

முதலமைச்சருக்கு படங்களை பார்க்கவே பொழுதுகள் போதவில்லை – அன்புமணி விமர்சனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி விமர்சனம்
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் முன்பு தூய்மைப் பணியாளர்கள் 13 நாளாக போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

தூய்மைப் பணியாளர்கள் கைது

இதனிடையே போராட்டம் தொடர்பாக வழக்கில் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தவும், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் இரவோடு இரவாக 1000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவதுவீரமல்ல, கோழைத்தனம் என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “சென்னையில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 12 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.


அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை

உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும்; தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை.

இதை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்திற்கு தரும் தொகையில் தூய்மைப்பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடிவதுடன், அவர்களுக்கு கூடுதல் ஊதியமும் வழங்கமுடியும். ஆனால், அதைச் செய்ய அரசுக்கு மனமில்லை.

வீரமல்ல, கோழைத்தனம்

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 12-ஆம் நாளாக நீடித்த நிலையில், போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும்; அவ்வாறு பேசியிருந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கக் கூடும். ஆனால், முதலமைச்சருக்கோ திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை. ஒருவேளை சமூகநீதியில் சிறந்த மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்து விட்டாரோ என்னவோ? ஒன்று மட்டும் உறுதி.

ஏழை எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அகற்றுவது வீரம் அல்ல... கோழைத்தனம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் வீரம் ஆகும். அதை செய்யாமல் அடக்குமுறையை ஏவி அவர்களை அகற்றிய திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.