தமிழ்நாடு

பஞ்சாப் கபடி போட்டி விவகாரம்.. சென்னை வந்தடைந்த வீராங்கனைகள்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளான தமிழக வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பினர்.

பஞ்சாப் கபடி போட்டி விவகாரம்.. சென்னை வந்தடைந்த வீராங்கனைகள்
சென்னை திரும்பிய கபடி வீராங்கனைகள்

2024-2025 ஆம் ஆண்டுக்கான பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம்,  அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நான்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் பஞ்சாப் சென்றிருந்தனர். 

அப்போது காலிறுதி சுற்றில்  தமிழகத்தைச் சேர்ந்த  அன்னை தெரசா பல்கலைக்கழகமும், பீகார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழகமும் மோதியது. அப்போது நடுவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது. ஃபவுல் அட்டாக் குறித்து  கேள்வி எழுப்பிய தமிழக கபடி வீராங்கனைகள் மீது நாற்காலிகளை வீசி எறிந்து நடுவர்கள் மற்றும் பலர் கொடூர தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.

மேலும் படிக்க: பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்.. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்..!

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்தாகவும், வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்புவார்கள் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, வீராங்கனைகள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், கபடி போட்டியின் போது தாக்கப்பட்ட தமிழக வீராங்கனைகள் இன்று ரயில் மூலம் சென்னை திரும்பியுள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இன்று செல்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை அழைத்து வரப்பட்ட வீராங்கனைகள் கூறியதாவது, "போட்டியை நடத்தும் குழுவினர் தொடர்ந்து ஒருதலைப் பட்சமாகவே நடந்து கொண்டனர். எங்களை எதிர் அணியினர் தாக்கியபோது யாரும் தடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு தலையிட்ட பின்னர் தான் நிலைமை மாறியது. நாங்கள் பாதுகாப்பாக டெல்லி அழைத்து செல்லப்பட்டு தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டோம். பின்னர் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தோம்” என்று கூறினர்.