தமிழ்நாடு

ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை டிஜிபி கடிதம்

தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை என பதில் கடிதம்

ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை டிஜிபி கடிதம்
ப்ளூ கிராஸ் அமைப்புக்கு டிஜிபி கடிதம்
தெரு நாய்கள் பிரச்சினை நாடு முழுவதும் பற்றி எரிகிறது. தெரு நாய்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் எதிராக ஒரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை மாறி மாறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் இரு தரப்பினரின் கருத்து மோதல்கள் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது.

ப்ளூ கிராஸ்க்கு டிஜிபி கடிதம்

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணி நடத்துவதும், தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதை தடுப்பவர்களுடன் வாக்குவாதம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ப்ளூ கிராஸ் இந்தியா அமைப்பு தமிழக காவல்துறையின் டிஜிபி வெங்கடராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவர்களுக்கு சமீபத்தில் மிரட்டல்கள் வருவதாகவும் தொந்தரவு செய்யப்படும் சம்பங்கள் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்து இருந்தனர்.

உணவளிக்க தனியாக இடம்

மேலும் இது போன்ற தொந்தரவுகளை தடுப்பது தொடர்பாக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் அந்த கடிதத்திற்கு டிஜிபி தரப்பில் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதலின் அடிப்படையில் ப்ளூ கிராஸ் இந்தியா அமைப்புக்கு தமிழக காவல்துறை டிஜிபி கடிதம் அனுப்பி உள்ளார். அனைத்து காவல் நிலையங்களிலும், இது போன்ற குற்றங்கள் முகாந்திரம் இருந்தால் கண்டிப்பாக எடுப்பார்கள் எனவும் தனியாக சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை எனவும் பதிலளித்துள்ளார். இதற்கான பதிலை ப்ளூ கிராஸ் இந்தியா அமைப்பின் தலைவருக்கு டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியிலும் நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தனியாக இடம் ஒதுக்குமாறும் ப்ளூ கிராஸ் இந்தியா அமைப்பு ஏற்கனவே கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.