தமிழ்நாடு

கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோயம்புத்தூர் கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
நேற்று இரவு 11:19 மணியளவில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கிருந்த காவலர் ஒருவர் அவரை விசாரித்து, அவரது மனநிலையைப் புரிந்துகொண்டு வெளியே அனுப்பி வைத்தார். இருப்பினும், அந்த நபர் யாருக்கும் தெரியாமல் மீண்டும் காவல் நிலையத்தின் முதல் தளத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு, உதவி ஆய்வாளர் அறையின் கதவைத் தாழிட்டு, ஒரு நாற்காலியின் உதவியுடன் வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று காலை, உதவி ஆய்வாளர் அலுவலகத்தைத் திறக்க முயன்றபோது, கதவு உள்ளே தாழிடப்பட்டிருப்பதைக் கண்ட காவலர்கள் சந்தேகமடைந்து, கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

உயிரிழந்தவர் யார்?

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கோயம்புத்தூர், பேரூர் ராமசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 60 வயது அறிவொளி ராஜன் எனத் தெரியவந்துள்ளது. இவருக்குத் திருமணம் ஆகவில்லை என்றும், சென்ட்ரிங் வேலை செய்துவந்தவர் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக, மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், யாரோ தன்னைக் கொல்ல வருவதாகத் தனது சகோதரியிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

காவல் துறையின் விளக்கம்:

இந்தச் சம்பவம்குறித்து கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், இது காவல் நிலையத்தில் நடந்த தற்கொலைதான் என்றும், இது லாக்கப் மரணம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். கவனக்குறைவாக இருந்த காவலர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தச் சம்பவம்குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் கூறினார். இந்தச் சம்பவம்குறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.