நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அனைத்து சிறைச்சாலைகளிலும் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலு, பரிசோதனை செய்து கொள்ளலாம்.
காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. ராத்திரியில் நடைபெறும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. நாங்கள் காந்தி மண்டபம் உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய இடங்களில் தினந்தோறும் மாநகராட்சி சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சுவர் ஏறி குதித்து இரவில் திருடச் செல்லும் திருடர்களை நாம் தடுக்க முடியாது. யார் வீட்டிலேயும் திருடப்போக கூடாது என தடுக்க முடியாது. அதற்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்.
எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் வீசப்பட்டதா, விழுந்ததா என்று அவர்களே இன்னும் உறுதியான முடிவை சொல்லவில்லை அவர் புகார் வந்தால் அது குறித்து அவர்கள் சொன்னால் பார்க்கலாம். அதிமுக ஐடிவிங் கூட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது. அதிமுகவின் வாக்கு இன்னும் குறையத்தான் செய்யும் இருக்கின்ற வாக்கை அவர்கள் தக்க வைத்தால் போதும்.
பாஜகவை கடுமையாக எதிர்த்ததால் மனோ தங்கராஜ் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்பது தவறானது. அதேபோல ஆளுநரிடம் மோதல் போக்கு இருந்தால் அவரின் பதவி மாற்றம் செய்யப்பட்டது என்பதும் தவறானது. அப்படியெல்லாம், ஆளுநருக்காக எல்லாம் மாற்ற முடியாது. உயர்கல்வி போன்ற பெரிய பொறுப்பை ஆதிதிராவிடர் சமூகத்திற்கு வழங்குவதில்லை என்ற பிம்பத்தை முதலமைச்சர் உடைத்தெறிந்து விட்டார்.
சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநருக்காக நான் புறக்கணிக்கவில்லை. நான் புறக்கணிப்பதாக இருந்தால் கடந்த ஆண்டு புறக்கணித்திருப்பேன். எனக்கு வேறு பணிகள் இருந்ததால் நான் இந்த ஆண்டு அதில் கலந்து கொள்ள இயலவில்லை. வர இயலாத காரணத்தை துணை வேந்தருக்கும், பதிவாளருக்கும் தகவல் தெரிவித்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.