நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு ஒன்றை தொடுத்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். அதையடுத்து போலீசார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கில் இதுவரை போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், "பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் 12 வார காலத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று காலை வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
ஆனால் சீமான் விசாரணைக்காக ஆஜராகவில்லை. நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞரணியினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினர். வழக்கறிஞர் சங்கரன் கடிதம் ஒன்றை வளசரவாக்கம் காவல் ஆய்வாளரிடம் கொடுத்தார். சீமான் ஆஜராகாததற்கு விளக்கம் அளித்தார்.
இதன் பிறகு வெளியே வந்த வழக்கறிஞர் சங்கரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வளசரவாக்கம் போலீசார் பேட்டி கொடுக்கவிடாமல் தடுத்தனர். இதனால் வழக்கறிஞர் குழுவினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து வழக்கறிஞர் சங்கரன் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். "2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் சம்மன் அனுப்பி இருந்தார். அதன்படி சீமான் இன்று ஆஜராக வில்லை. புகார்தாரரான நடிகை ஏற்கனவே அவர் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறி 2 முறை எழுத்துப்பூர்வமாக இதே காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் சம்மன் கொடுக்கப்பட்டது. அப்போது சீமானிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். எழுத்துப்பூர்வமாக விளக்கத்தை சீமான் அளித்தார். தற்போது மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள சம்மன் அரசியல் அழுத்தம் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. சம்மன் வருவதற்கு முன்பாகவே கட்சி தொடர்பான வெளிமாவட்ட நிகழ்ச்சிகளில் ஒத்து கொண்டிருந்தார். அதனால் தான் அங்கு சென்றுள்ளார். இந்த விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கும் படி எழுத்துப்பூர்வமாக கடிதம் காவல்துறையிடம் கொடுத்துள்ளோம்.
துணை ஆணையரிடம் கொடுத்துள்ளோம். மற்றொரு தேதியில் சம்மன் கொடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 12 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள் என்று தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவை திரித்து செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. சீமான் குற்றவாளிபோல சித்தரித்து வெளியிட்டுள்ளது. அதன் பின்னணியில் திமுக இருக்கிறது" என்று வழக்கறிஞர் சங்கரன் தெரிவித்துள்ளார்.
சீமான் தரப்பில் வழங்கப்பட்டுள்ள கடிதம் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அடுத்ததாக மீண்டும் ஒரு சம்மன் சீமானுக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.