தமிழ்நாடு

கெமிக்கல் பாட்டில் உடைந்து அரசுப் பள்ளி மாணவன் படுகாயம்: மழுப்பும் பள்ளி நிர்வாகம்

கெமிக்கல் பாட்டிலை தூக்கிச் சென்ற போது எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்த நிலையில் படுகாயமடைந்த அரசு பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெமிக்கல் பாட்டில் உடைந்து அரசுப் பள்ளி மாணவன் படுகாயம்: மழுப்பும் பள்ளி நிர்வாகம்
chennai corporation school student injured when handle chemical bottles
சென்னை மாநகராட்சி பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவனை கெமிக்கல் பாட்டிலை தூக்க வைத்து வேலை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கெமிக்கல் பாட்டிலை கையாளும் போது படுகாயமடைந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது மகனின் நிலைமைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு எம்.எஸ் முதல் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகன் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 25 ஆம் தேதி பள்ளி முடித்து மாணவன் வீட்டிற்கு சென்றார்.

அப்போது மாணவனின் உடலில் கெமிக்கல் பட்டு படுகாயமாக இருந்ததை கண்டு தாய் சந்தியா அதிர்ச்சியடைந்தார். வலியால் துடித்த மாணவனை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பள்ளியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளரான பெண் ஒருவர் தன்னிடம் அங்கிருந்த மூட்டை ஒன்றை தூக்கி கொண்டு ஆய்வகத்தில் வைக்கும்படி கூறியதாகவும், அதனை எடுத்து வைக்கும் போது கெமிக்கல் பாட்டில் உடைந்து தன் மீது பட்டதாகவும் மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

காவல்நிலையத்தில் புகார்:

இதையடுத்து சந்தியா பள்ளிக்கு சென்று விசாரித்த போது மாநகராட்சி பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியை யாரும் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் பிறகு சந்தியா சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ஹேமா, பள்ளி ஆசிரியை ஆகியோரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். தனது மகனின் இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் என்று மாணவின் தாயார் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "எனது மகனை பள்ளியின் தூய்மை பணியாளர் வேலை வாங்கி இந்த நிலைமைக்கு ஆளாக்கி உள்ளார். கெமிக்கல் பட்டு காயமடைந்தது குறித்து பள்ளி ஆசிரியையோ, உதவி தலைமை ஆசிரியையோ எதனையும் தெரிவிக்கவில்லை. போனில் பேசினோம். அப்போது கூட பள்ளி ஆசிரியை முறையான விளக்கம் தரவில்லை. தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் தான் போலீசில் புகார் அளித்தோம். பள்ளிக்கு பயில வரும் மாணவனை எப்படி வேலை செய்ய சொல்லலாம்? தலைமை ஆசிரியை இல்லாமல் அந்த பள்ளி செயல்படுகிறது. இந்த நிலைமைக்கு காரணமான உதவி தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது மகனை வேலை வாங்கிய தூய்மை பணியாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாணவனின் தாயார் சந்தியா தெரிவித்தார்.

"தனது மகன் தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பாக பள்ளி தரப்பில் இருந்து யாரும் வந்து பார்க்கவில்லை. எந்த விளக்கமும் அளிக்கவில்லை. உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று மாணவனின் தந்தை பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கெமிக்கல் பாட்டில்களை போலீசார் ஆய்வுக்காக எடுத்து செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் இந்த பள்ளிக்கு சென்று கல்வி அதிகாரிகள் யாரும் ஏன் இதுவரை விசாரணை நடத்தவில்லை? என்ற கேள்வியை குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் எழுப்பியுள்ளனர்.