தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி படுகொலை: 8 பேர் கைது!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொலை செய்து விவகாரத்தில் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி படுகொலை: 8 பேர் கைது!
Kilpauk Hospital Murder
சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ரவுடி ஆதி என்கிற ஆதிகேசவன் (20), கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் வைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாகக் கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் இதுவரை 8 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் நடந்தது என்ன?

கொலை, அடிதடி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடி ஆதி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திருமணமான சாருமதி (23) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சாருமதி கேட்டுக் கொண்டதன் பேரில், தனது தோழியின் குழந்தை இறப்புக்காக ஆதரவாக இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார் ஆதி.

இரவு முழுவதும் ஆதிக்கு மது வாங்கி கொடுத்து, மருத்துவமனையின் மகப்பேறு வார்டு அருகே இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலையில் அங்கு வந்த கும்பல் ஆதியைக் கத்தியால் வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடியது.

கொலைக்குப் பின்னணி: முன்விரோதமா?

ஆதிகேசவன், பிரபல ரவுடி விக்கி என்ற அமாவாசையின் கூட்டாளி ஆவார். ரவுடி பழனி கொலையில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த ஆதி, சமீபத்தில் சக ரவுடியான ஆட்டோ கணேஷை கோயம்பேடு பகுதியில் கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனால், ஆதிக்கு ரவுடிகளிடையே கடும் முன்விரோதம் இருந்தது.

இந்தக் கொலையில், ஆதியின் தோழி சாருமதிக்குத் தொடர்பு இருக்கிறதா, திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஆதி கொல்லப்பட்டாரா அல்லது ரவுடி கும்பலின் முன்விரோதத்தால் கூலிப்படை ஏவப்பட்டதா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதியின் நண்பர்களான சூர்யா, அலிபாய், கார்த்திக் ஆகியோரும் கொலைக்கு உதவியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

காவல்துறையின் நடவடிக்கை

சம்பவம் குறித்துத் தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று ஆதியின் உடலைக் கைப்பற்றினர். ஆதியின் தாயார் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்த சென்னை காவல்துறை தெற்கு மண்டலக் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மொத்தமாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கொலை நடந்தபோது பணியில் இருந்த காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.