தமிழ்நாடு

பெண்களுக்கு பொன்னான வாய்ப்பளித்த கோல்டன் ஸ்பேரோ கார்னிவல்!

ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் நடைப்பெற்ற கோல்டன் ஸ்பேரோ கார்னிவல் நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்று தங்களது திறமையினை வெளிப்படுத்தினர்.

பெண்களுக்கு பொன்னான வாய்ப்பளித்த கோல்டன் ஸ்பேரோ கார்னிவல்!
ரோட்டரி சங்கமானது, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்கள் வளர்ச்சி பெற ஏராளமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெண்மையின் பெருமையை உலகிற்குப் பறைசாற்ற, ‘கோல்டன் ஸ்பேரோ’ கார்னிவல் நிகழ்வினை சென்னையில் சமீபத்தில் நடத்தியது, ரோட்டரி மாவட்டம் 3233.

கோயம்பேட்டில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரி கலையரங்கத்தில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அரங்கேறிய இந்த நிகழ்வில், ஏராளமான பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, தங்களுடையத் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குள் இருக்கும் ‘தேவதை’யை உலகிற்கு அறிமுகப்படுத்தினர்.

இந்த ‘கோல்டன் ஸ்பேரோ’ நிகழ்வு திருமதி. ஜெயஸ்ரீ போத்ரா அவர்களின் எண்ணத்தில் உதித்த ஓர் அற்புதமான முயற்சியாகும். ரோட்டரி மாவட்டம் 3233-ன் முதல் பெண்மணியான இவர், பெண்களின் முன்னேற்றத்திலும், அவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்கு உறுதுணையாக, மாவட்ட ஆளுநர் மகாவீர் போத்ரா அவர்கள் இருந்து வருகிறார். இந்த ‘கோல்டன் ஸ்பேரோ’ நிகழ்ச்சியின் தலைவராக டாக்டர் சுஜாதா ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்று, சிறப்பாக நடத்திக்கொடுத்தார்.

பேராசிரியர் பர்வீன் சுல்தானா, சென்னை மேயர் ப்ரியா ராஜன், சின்னத்திரைப் பிரபலங்கள் அஸார் & டிஎஸ்கே உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனீஸ் பேகம், நன்றியுரை வழங்கினார். காலை 8:30 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மாலை 6:30 மணி வரையில் ஆடல், பாடல் என உற்சாகம் குறையாமல் களைகட்டியது மற்றும் அன்று ரோட்டரி கிளப்பின் கோல்டன் ஸ்பேரோ என்ற உலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த பெண்களுக்கான கிளப் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் சேர விரும்பும் பெண்கள் சேர்மனை பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளவும் (ph: 90940 21144)