தமிழ்நாடு

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளை: ₹1 லட்சம் ரொக்கம், 13 சவரன் நகைகள் திருட்டு!

அண்ணா நகரில் உள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில், பூட்டை உடைத்து ₹1 லட்சம் பணம், 13 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற கொள்ளையர்களில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

 ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளை: ₹1 லட்சம் ரொக்கம், 13 சவரன் நகைகள் திருட்டு!
ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளை: ₹1 லட்சம் ரொக்கம், 13 சவரன் நகைகள் திருட்டு!
சென்னை, அண்ணா நகர், சாந்தி காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஞானப்பிரகாசம் என்பவரின் மகன் விவேகானந்தர், கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி குடும்பத்துடன் பூந்தமல்லியில் உள்ள மற்றொரு வீட்டிற்குச் சென்றிருந்தார். நேற்று காலை மீண்டும் அண்ணா நகர் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ₹1 லட்சம் ரொக்கம், 13 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனடியாக விவேகானந்தர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் குற்றப்பிரிவு போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அமைந்தகரையைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கணேசன் (எ) லிங்கம் என்பவரும் அவரது நண்பரான ரகு என்பவரும் இணைந்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் தொடர் கொள்ளையனான கணேசன் (எ) லிங்கம் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 2 குத்துவிளக்குகள், ஐம்பொன் நடராஜர் சிலை மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனான ரகு என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.