பெரியபுராணம் எழுதிய சேக்கிழார், குன்றத்தூரில் கட்டிய திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம், மே 13ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் விழாவுக்கு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் மட்டுமே நன்கொடைகள் வசூலிக்கப்பட்டதாகவும், மற்ற சமுதாயத்தினரிடம் நன்கொடைகள் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறி, குன்றத்தூரைச் சேர்ந்த அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க தலைவர் இல.பாண்டியராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
தீண்டாமையின் இன்னொரு வடிவம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, தீண்டாமை இந்நாட்டில் பல்வேறு வழிகளில் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் சாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம் என வேதனை தெரிவித்துள்ளார்.
கடவுள் முன் சாதி இருக்கக்கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைத் சுட்டிக் காட்டிய நீதிபதி, அனைத்து சமுதாயத்தினரும் நன்கொடை வழங்க அனுமதிக்க வேண்டும் என அளித்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.