தமிழ்நாடு

போத்தீஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கோவை சொர்ண மஹால் நகைக்கடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

போத்தீஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!
போத்தீஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!
தமிழகம் முழுவதும் போத்தீஸ் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இன்றும் ஐந்தாவது நாளாகத் தொடர்வதால் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கோவையில் உள்ள போத்தீஸ் சொர்ண மஹால் நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் முகாமிட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், மற்றும் பிற நிறுவனங்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். கோவையில் ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகளில் மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த சோதனையின் முடிவில், கணக்கில் வராத பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஒப்பணக்கார வீதியில் உள்ள போத்தீஸ் சொர்ண மஹால் நகைக்கடையில் மட்டும் இன்றும் ஐந்தாவது நாளாகச் சோதனை நீடிக்கிறது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், ஒரு குழுவினர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து எடுத்துச் சென்றதாகவும், மற்றொரு குழுவினர் அந்த ஆவணங்கள் குறித்த தொடர் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சோதனையின் முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.