தமிழ்நாடு

முதுகலை பொறியியல் படிப்பு.. நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு

முதுகலைப் பொறியியல் படிப்புகளான   எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விற்கு ஜனவரி 24 -ம் தேதி முதல் பிப்ரவரி 21-ந்  தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

முதுகலை பொறியியல் படிப்பு.. நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு
முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் முதுகலை தொழிற்கல்விப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது.  தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மூலம் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கும் முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான்  ஆகியவற்றிற்கு ( CEETA-PG )நுழைவுத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. 

இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “முதுகலைப் பொறியியல் படிப்புகளான   எம்.இ,  எம்.டெக்,  எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும்  எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான   தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விற்கு (TANCET) ஜனவரி 24-ம் தேதி முதல்  பிப்ரவரி 21-ம் தேதி வரை  https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம்.

எம்.சி.ஏ, எம்.பி.ஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 500 ரூபாயும்,  பிற வகுப்பினர் ஆயிரம் ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச்  22-ம் தேதி  நடைபெறும். எம் .இ, எம்.டெக், எம். ஆர்க், எம்.பிளான்  ஆகிய  முதுகலை பொறியியல்  படிப்புகளுக்கு  விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 900  ரூபாயும்,  இதரபிரிவினர் ஆயிரத்து 800 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் கலந்தாய்வு கட்டணமும் அடங்கும். 

இவர்களுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 23-ம் தேதி நடைபெறும்.  இதற்கான கட்டணத்தை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் செலுத்த வேண்டும்.  இதே இணையதள முகவரியில் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் . நுழைவுத்தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், பாகூர் ஆகிய 15 இடங்களில் நடைபெறும். 

மேலும் விபரங்களை பெறுவதற்கு செயலளார், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு ,  நுழைவுத்தேர்வு மையம், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 044-2235 8289 ,  044-2235 8314 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம். மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.