தமிழ்நாடு

Pollachi case : பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக-வின் பங்கு என்னவென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

 Pollachi case : பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி!
பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. திமுகவுக்கு இபிஎஸ் கேள்வி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளாதவது, பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதலமைச்சர் என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஸ்டாலின் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி என்றும் விமர்சித்துள்ளார்.

கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு என்று பதிவிட்டுள்ள இபிஎஸ், கொடும் குற்றம் புரிந்த கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவரும், ஜாமீன் தந்தவரும் திமுகவை சார்ந்தவர்கள் என்றும், வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பி உள்ளார்.

முதலமைச்சர் தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்றும் விமர்சித்துள்ளார்.

அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று ஸ்டாலின் புலம்புவதாகவும், ஆனால், நான்கு ஆண்டுகளாக ஸ்டாலின் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug என்றும் கூறியுள்ளார்.



இத்தனை நாட்கள் "என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும், மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும் என்றும் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.